குறிக்கோள் - சுகந்தி



காலை அசெம்பெளியில் பள்ளியின் முதல்வர் சிவராமனைப் பாராட்டிக் கொண்டிருந்தார். சிவராமன் அந்தப் பள்ளியின் சிறந்த விளையாட்டு வீரன். அண்மையில் மாவட்ட அளவில் நடந்த போட்டியில் அவன் தங்கப் பதக்கம் வாங்கியிருந்தான். அதை மகிழ்சியோடு சொல்லி சிவராமனை புகழந்து பேசினார் முதல்வர், குழந்தைகளே, சிவராமன் உங்களுக்கெல்லாம் நல்ல எடுத்துக் காட்டு. தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு சிவராமன் அயராது பாடு பட்டதை நீங்கள் அறிவீர்கள். அவனுடைய முயற்சியின் பலனால் சிவராமன் மட்டுமல்ல, நம் பள்ளிக்கே பெருமை. நீங்கள் ஒவ்வொருவரும் சிவராமனைப் போல வெற்றி பெற உங்களிடம் திறமை இல்லாதிருக்கலாம்.

ஆனால் ஒரு குறிக்கோள் உங்களுக்கு வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும். அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நாம் தினமும் செயல் பட்டால் நாமும் முன்னேறலாம், நாடும் முன்னேறும் என்று சொல்லி, சபாஷ் சிவரமா! இதே போல் இன்னும் பல முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சிவராமனின் தோளில் தட்டி அவனை உற்சாகப் படுத்தினார் முதல்வர்.

சந்தோஷமாய் நண்பன் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவராமனின் நண்பன் முகிலன். தன் நண்பனை நினைக்கையில் அவனுக்குப் பெருமையாக இருந்தது. அதே சமயம் ஆதங்கமாகவும் இருந்தது. சிவராமனைப் போல தன்னால் எதையும் சாதிக்க முடியவில்லையே என்று அவனுக்கு ஏக்கமாக இருந்தது. ஆனாலும் முதல்வரின் வார்த்தைகள் அவனுக்கு நம்பிக்கையூட்டின. ஒரு குறிக்கோளோடு பாடு பட்டால் எதையும் சாதிக்கலாம் என்றாரே முதல்வர். முகிலன் முடிவெடுத்தான். அவனும் எதையாவது சாதிக்க வேண்டும் ஒரு முறையாவது சிவராமனைப் போலப் பள்ளி முதல்வர் கையால் பாராட்டுப் பெற வேண்டும் என்பதே அவன் குறிக்கோள்.

அசெம்பளி கலைந்து மாண்வர்கள் அவரவர் வகுப்புக்குச் சென்றனர். சிவராமனை வகுப்பில் ஆசிரியரும் மற்ற மாணவர்களும் மறுபடியும் பாராட்டினர். நண்பனுக்காக மனம் மகிழ்ந்த போதும் தானும் இதைப் போல் கண்டிப்பாய் பாராட்டப் பட வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான் முகிலன். பள்ளியில் பாடங்கள் நடக்கும் போதும், மதிய உணவு உண்ணும் போதும் மாலையில் சைக்கிளில் வீடு திரும்பும் போதும் அவனுடைய அடி மனதில் இதே சிந்தனையாக இருந்தது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தான் முகிலனுக்குத் தெரியவில்லை.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து, கணக்கு வகுப்பு முடிந்து வெளியே செல்கையில் கணக்கு ஆசிரியர் முகிலனை அழைத்தார். முகிலா, நீ இன்று வீட்டுக்குப் போகும் முன் என்னை வந்து பார்த்து விட்டுப் போ என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். முகிலனுக்கு ஆசிரியர் தன்னை எதற்கு இப்படித் தனியாக அழைக்கிறார் என்று தெரியவில்லை. மனம் சிறிது கலக்கமாயிருந்தாலும் மாலையில் அவரை மறக்காமல் காணச் சென்றான். முகிலனைக் கண்ட கணக்கு ஆசிரியர், வா முகிலா, வா உனக்காகத்தான் காத்திருக்கிறேன் என்று அன்புடன் சொன்னார். முகிலனுக்கு மனம் திடமானது. தான் எதுவும் தவறு செய்யவில்லை அதனால் தான் ஆசிரியர் தன்னிடம் கோபப் படவில்லை என்று நினைத்துக் கொண்டு ஐயா, என்னை எதற்காக வரச் சொன்னீர்கள்? என்று கேட்டான்.

இதோ, இது உன்னுடைய கணக்குப் பயிற்சிப் புத்தகம் தானா என்று பார்? என்று அவனிடம் ஒரு நோட்டை நீட்டினார். அது முகிலனுடைய கணக்குப் பயிற்சிப் புத்தகம் தான். ஆமாம் ஐயா, இது என்னுடையது தான் என்றான் முகிலன் அப்படியானால் பார் என்ற ஆசிரியர் அவரே பயிற்சிப் புத்தகத்தைத் திறந்து காண்பித்தார். அவர் திறந்து காட்டிய பக்கங்களைப் பார்த்த முகிலன் தலை குனிந்தான். பயிற்சிப் புத்தகத்தின் கணக்குப் பக்கத்தின் ஓரப் பகுதிகளில் வெறுமையாக இருக்க வேண்டிய எல்லா இடத்திலும் கிறுக்கப் பட்டிருந்தது. அவை கிறுக்கல் என்று சொல்வதற்கில்லை. சின்ன சின்னதாய் படங்கள். மேஜை மேலும் இருக்கும் பேனா, சாக்பீஸ், வகுப்பறை ஜன்னல் ஜன்னல் வழியாகத் தெரியும் காட்டு சாமந்திப் பூ, பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மாணவனின் தலை, அவனுடைய புத்தகங்கள் என்று பயிற்சிப் புத்தகத்தின் மமூலையில் எல்லாம் வரையப்பட்டிருந்தது. முகிலனுக்கு அவமானமாக இருந்தது. அவன் வகுப்பில் பாடத்தை சரியாக கவனிக்கவில்லை என்று தானே ஆசிரியர் நினைத்திருப்பார். அதனால் தான் அவனைத் தனியாகக் கண்டிக்க ஆசிரியர் அழைத்து இருக்கிறார் என்பதை உணர்ந்தவன், ஐயா என்னை மன்னித்து விடுங்கள். நான் இனி வகுப்பு நேரத்தில் இப்படி செய்ய மாட்டேன் பாடங்களை ஒழுங்காக கவனிப்பேன் என்றான் கம்மியக் குரலில்.

அவன் வருத்தப் படுவதைக் கண்ட ஆசிரியர், முகிலா, நீ கணக்கு வகுப்பில் படம் வரைந்தது தவறு என்றாலும், நீ உன்னுடைய கணக்குகள் அனைத்தையும் சரியாகவே போட்டிருப்பதால் உனக்கு ப்பாடம் புரிந்த பின் தான் இதை நீ வரைகிறாய் என்று நினைக்கிறேன். தேர்வுகளிலும் நீ நல்ல மதிப்பெண்ணே வாங்கியிருக்கிறாய் என்பதால் உன்னை மன்னித்தேன். ஆனால் இனிப் படம் வரைவதற்கு என்று தனியாக ஒரு புத்தகத்தைப் பயன் படுத்து" என்றபடி ஒரு நோட் புக்கை அவனிடம் கொடுத்தார். "இனிப் படம் வரைய தோன்றும் போதெல்லாம் இந்த புத்தகத்தில் வரை. அப்போது கண்ட இடத்திலெல்லாம் வரைய மனம் வராது. அது மட்டுமல்லாமல் மனதை ஒருமைப்படுத்தி வரையவும் முடியும். உன்னுடைய திறமை பொலிவு அடைவதையும் நீ கண்கூடாகப் பார்க்க முடியும்" என்றவர் "படம் வரைவதை மட்டும் நிறுத்தாமல் செய். நீ பெரிய ஓவியனாக வருவாய்" என்று முகிலனை வாழ்த்தி அனுப்பினார்.

ஆசிரியரின் அறையை விட்டு வெளியே வந்த முகிலன் ஒரு புறம் ஆசிரியரின் வாழ்த்தினால் மனம் மகிழந்தாலும் நிஜத்தில் மனம் வாடினான். இவன் படம் வரையும் திறமையை வளர்த்துக் கொண்டால் அவன் பெரியவனானதும் தானே சாதிக்க முடியும். அவன் பள்ளி மாணவனாக இருக்கும் போது சாதித்து முதல்வர் கையால் பாராட்டுப் பெற முடியாதே! அவன் எப்படியாவது எதையாவது சாதித்து முதல்வரிடம் பள்ளி மாணவர்கள் அனைவர் முன்னிலையிலும் பாராட்டுப் பெற வேண்டும் என்பதே அவனுடைய குறிக்கோள். மனம் சோர்ந்தாலும் முகிலன் கணக்கு ஆசிரியரின் அறிவுரையைக் கைவிடவில்லை. அவன் எங்கு சென்றாலும் படம் வரைய அவர் கொடுத்த புத்தகத்தை எடுத்துச் சென்றான். படம் வரையத் தேவையான பென்சில்கள் அவனிடம் எப்போதும் தயாராக இருந்தன. எங்கே சும்மா இருக்க ஒரு நிமிடம் கிடைத்தாலும் எதிர் உள்ள பொருட்கள், மனிதர்கள், மரங்கள், மாடு, சைக்கிள், என்று எதைப் பார்த்தாலும் வரைய ஆரம்பித்தான்.

படம் வரைய வரைய அவனுடைய வேகமும் நுணுக்கமும் வளர்ந்தன. அவன் போடும் ஒவ்வோரு கோடும் ஒவ்வோரு வளைவும் அவனுடன் கதை பேசின. தான் வரையும் ஓவியத்தோடு அவன் ஒன்றிப் போனான். அவன் எப்போதுபார்த்தாலும் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்த அவன் நண்பர்கள் அவனை அணுகி தங்களை வரைந்து தருமாறு கேட்டனர். முகிலனும் மகிழ்ச்சியுடன் வரைந்து தருவான். ஓவியம் வரைவதில் அவன் முனைப்பாக இருந்தாலும் அவன் குறிக்கோளை மறந்து விடவில்லை. ஒரு நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்தான்.

அன்று ஞாயிறு.

முகிலன் தன் தாயுடன் பாட்டி வீட்டுக்குச் செல்வதற்காகp பேருந்து நிழல் குடைக்குள் காத்திருந்தான். அப்படிக் காத்திருக்கும் வேளையில் அங்கிருந்தவர்களின் முகத்தை ஆழமாகக் கவனித்தான். அவர்கள் முகத்தை வரைய அவனுடைய கைகள் துறுதுறுத்தன. மரத்தடி டீக்கடை, டீக்கடை வாசலில் உட்கார்ந்திருந்திருந்தவரின் முதுகு, அவர் பக்கத்தில் வாலாட்டிக் கொண்டிருந்த நாய். மரத்தில் சாய்ந்திருந்த புகை பிடிக்கும் மனிதன் என்று ஒவ்வோருவரையும் பார்க்கப் பார்க்க அங்கே அப்படியே உட்கார்ந்து எல்லாவற்றயும் இந்த வினாடியே படம் வரைய அவன் மனம் ஏங்கியது. ஆனால் அம்மா தடுத்து விட்டார். பேருந்து வரும் சமயம் கவனம் சிதறி விட்டால் பேருந்து போய் விடும், எனவே கொஞ்சம் பொறுமையாக இருக்கும் படி முகிலனிடம் கூறினார். பாட்டி வீடு போய் இறங்கியதும் எவ்வளவு வேண்டுமானலும் வரைந்து கொள் என்று விட்டார் அவர்.

"ஐயோ என் செயின்"

என்று தீடிரென்று அங்கே நின்று கொண்டிருந்த ஒரு பாட்டி அலறினாள். அனிச்சையாக அம்மா அவனைப் பாதுகாப்பாக, தன் தொடையோடு அணைத்துக் கொண்டாள். எல்லோர் கவனமும் அந்தப் பாட்டியிடம் திரும்பியது. தூரத்தில் ஒருவன் ஓடுவது தெரிந்தது. தாயின் சேலைக்குள் இருந்த படி எட்டிப் பார்த்தான் முகிலன். டீக்கடை மரத்தின் மேல் சாய்ந்திருந்தானே, அவன் தான் பாட்டியின் செயினை அறுத்துக் கொண்டு ஓடுகிறான் என்று முகிலன் அடையாளம் கண்டு கொண்டான். ஒரு சிலர் அந்தத் திருடனின் பின்னால் ஓடி அவனைப் பிடிக்க முடியாமல் தோற்றுத் திரும்பினர்.

பாட்டி கழுத்தைத் தடவிய படி அழுது கொண்டு நின்றிருந்தாள். அங்கு நடந்த களேபரத்தைக் கண்டு ஒரு காவலர் அங்கு வந்தார். ஆளுக்கு ஆள் அவரிடம் நடந்ததைச் சொன்னார்கள். சரி, உங்கள் யாருக்காவது அவனை அடையாளம் காட்ட முடியுமா? சரியான முறையில் அடையாளம் காட்ட முடியாத படி சாதாரணமாக அவர்கள் நடந்து கொள்வதால் தான் இந்த மாதிரி சில்லறைத் திருடர்கள் தப்பித்து விடுகிறார்கள் என்றார் அவர். இல்லையே சார், சரியாப் பார்க்கலையே, பேருந்து வருகிறதா என்று பார்ப்பதிலேயே தான் எங்கள் கவனம் இருந்தது என்று பெரியவர்கள் சொல்ல, முகிலன் முன் வந்தான், நான் அந்தத் திருடனை நன்றாகக் கவனித்தேன். என்னால் அவனை அடையாளம் காட்ட முடியும் என்ற படி அம்மாவின் பையிலிருந்த நோட்டை எடுத்து, நிமிடங்களில் மரத்தின் மீது சாய்ந்திருந்த அந்த ஆளை வரைந்து காவலரிடம் கொடுத்தான்.

இவன் தான், இவன் தான் என்று முகிலன் வரைவதை வேடிக்கை பார்த்தவர்கள் கூறக் காவலர் பெருமையாக முகிலன் தோளில் தட்டிக் கொடுத்த படி, இவன் இந்த மாதிரித் திருடுகளில் அடிக்கடி ஈடுபடுபவன். இனி அவனை எளிதாகப் பிடித்துவிடலாம். உங்கள் செயினையும் மீட்டு விடலாம் பாட்டி என்று அழுது கொண்டிருந்த பாட்டியை சமாதானப்படுத்தினார். முகிலனின் தாய் பெருமையோடு மகனைக் கட்டிக் கொண்டார். முகிலன் தன் தாயை மகிழ்சியோடு கட்டிக் கொண்டான்.

அவன் தன் குறிக்கோளில் வெற்றி பெற்று விட்டான் என்று சொல்லவும் வேண்டுமா?

மழலைகளே நினைவில் கொள்ளுங்கள்.

ATTITUDE is every thing!

Be care ful of your thoughts, for your thoughts become your words.

Be careful of your words, for your words become your actions.

Be careful of your actions for your actions become your habits.

Be careful of your habits, for your habits become your character

Be careful of your character, for your character becomes your destiny.

1 Comments:

Blogger வவ்வால் said...

குழந்தைகள் கதைகள் என்றி வலைப்பதிவில் ஒரு மாறுபட்ட களத்தில் இயங்குறீர்கள், நல்ல முயற்சி! ஆனால் இதனை எல்லாம் படிக்க குழந்தைகளுக்கு ஏது நேரம், ஜெட்டிக்ஸ்,போகோ என்று போய்விடுகிறார்கள்

4:13 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home