பிரதாப முதலியார் சரிதம்


வணக்கம்.
தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் பிரதாப முதலியார் சரிதம் என்று அறியப்படுகிறது. இதை எழுதியவர் மயூரம் வேதநாயகம் பிள்ளை. அந்தக் கால மொழி நடையில் எழுதப்பட்ட இந்த நாவலைக் குழந்தைகள் வாசிக்கும் விதத்தில் எளிய தமிழில் வழங்க இருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

-oOo-

பிரதாபன் கதை.

சத்தியபுரி என்ற ஊரில் வசித்த ஏகாம்பரம் எனும் பெயருள்ள பிரதாபனின் பாட்டனாருக்குப் பள்ளிக் கூடத்தில் கல்விக் கட்டணம் செலுத்திக் கற்க வசதி இல்லாமல் இருந்தது. அதனால் அவர் சில ஆசிரியர்களிடம் அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து அததுடன் கல்வியையும் கற்றுக்கொண்டார்.

இப்படியே கற்று நல்ல அறிவு பெற்ற இளைஞனாக வளர்ந்த பின் ஒரு நாள் சாலையில் ஒரு இஸ்லாமியப் பக்கிரி குதிரையில் போகும்போது குதிரையிலிருந்து விழுந்து விட்டதைப் பார்த்தார். மயங்கி விழுந்த அவனுக்கு யாருமே உதவி செய்யாமல் போனார்கள். அவர் மட்டும் அவனைத் தூக்கி, காயங்களுக்கு கட்டுப் போட்டு முதலுதவி செய்தார்.

மயக்கம் தெளிந்து எழுந்த பக்கிரி, "நான் உங்கள் உதவிக்கு என்ன பிரதிபலன் செய்ய முடியும்?" என்று நன்றியுடன் வணங்கினான்.

அவரோ, "பிரதி பலன் எதிர்பார்த்து நான் இதைச் செய்யவில்லை. ஆபத்தில் உதவுவது புண்ணிய காரியம். அந்தப் புண்ணிய பலன் எனக்கு சொர்க்கத்தைத் தரும்" என்றார்.

"இறந்த பிறகு கிடைக்கும் சொர்க்கம் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் உங்களுக்குக் கடவுள் அருள் தருவார்" என்று அந்தப் பக்கிரி சொன்னான்.

"நான் நிரந்தரமான சுவர்க்க பலனைத்தான் விரும்புகிறேனே தவிர, வாழ்வில் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை" என்றார்.

அவர் இப்படியே தொடர்ந்து சொல்ல, பக்கிரிக்கு கோபம் வந்தது. அவன் அவர் கன்னத்தில் அறைந்து, "நான் சொல்வதை எதிர்த்துப் பேசுகிறாயா?" என்று கேட்டு விட்டுக் குதிரைலில் ஏறிப் போய்விட்டான்.

அப்போது அங்கிருந்த மற்றவர்கள், "இந்த அயோக்கியனுக்கு நாங்கள் எல்லாம் உதவி செய்யாமல் இருந்த போது நீ மட்டும் பெரிதாக உதவி செய்யப் போனாயே? அதற்குப் பலன் கிடைத்து விட்டது" என்று கேலி செய்து பேசினார்கள். அவரும் அவமானத்துடன் தலைகுனிந்தார்.

சில நாட்கள் கழித்து நாட்டை ஆண்டு கொண்டிருந்த நவாபின் சேவகர்கள் வந்து அவரைக் கைது செய்து கொண்டு போனார்கள். அவரோ, "நான் எந்தத் தவறும் செய்யவில்லையே" என்று அழுது கொண்டே போனார்.

நவாபின் சபைக்குள் வந்தவுடன் நவாப் எழுந்து வந்து அவரைக் கட்டிப் பிடித்து, "நான் பக்கிரியாக மாறுவேடத்தில் நாடு சுற்றி வரும்போது ஏற்பட்ட விபத்தில் என் உயிரைக் காப்பாற்றிய உமக்கு, உமது அறிவுத் தகுதிகளுக்காகவும் என் சபையில் திவான் பதவி தருகிறேன். உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்.

"வாழ்க்கையில் கிடைக்கும் பிரதிபலன் வேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு முறை பட்ட அடி நினைவிருக்கிறது. அதை நான் மறந்தாலும் என் கன்னம் மறக்காது" என்றார் ஏகாம்பரம்.

நவாப் சிரித்துக் கொண்டே, "கூப்பிட்டால் வராமல் இருந்து விடுவீர்கள் என்றுதான் காவலர்களைக் கொண்டு அப்படிக் கொண்டுவர சொன்னேன்" என்றார்.

ஏகாம்பரம் திவானாகி, சிறப்பாகப் பணி புரிந்தார். நவாபுகள் அவருக்குப் பொன்னும், செல்வமும், கிராமங்களும் ஏராளமாகப் பரிசளித்தார்கள். வயதான காலத்தில் அவர் தனது செல்வங்களுடன் திரும்பி சத்தியபுரியில் சந்தோஷமாக வாழ்ந்து பின்னர் இறந்தார். அவரது காலத்துக்குப் பின் அவரது சொத்துக்கள் எல்லாம் அவரது மகனான கனகாசலத்துக்குக் கிடைத்தன.

அவருக்கும் அவரது மனைவி சுந்தரத்தண்ணிக்கும் பிறந்த மகன் தான் இந்த கதையின் நாயகன் பிரதாபன்.

அவர்களுக்குப் பிரதாபன் ஒரே மகனாக இருந்ததால் மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். பிரதாபன் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவனது குறும்புத் தனங்களை எல்லாம் அவனது தந்தையார் கண்டிப்பதில்லை. ஆனால் அவனது எதிர்காலம் கருதி அவனது தாயார் கொஞ்சம் கண்டிப்புக் காட்டிக் கட்டுப்படுத்தி வந்தார்.

பிரதாபனுக்கு ஐந்து வயதானதும் அவனுக்குக் கல்வி கற்பிக்க அவனது தாயார் விரும்பினார். ஆனால் அவனது தந்தையாரோ அவன் இன்னும் குழந்தை என்று கூறிவிட்டார். அதனால் பிரதாபன் எட்டு வயது வரை எழுத்தறிவு இல்லாமல் வளர்ந்தான்.

அவனது தாயாரின் வற்புறுத்தல் காரணமாக அவன் தந்தை அவனை அழைத்து, "உன் அம்மா உன்னைப் படிக்க வைக்க வேண்டும் என்கிறாள். உன் விருப்பம் என்ன?" என்று கேட்டார்.

"நான் எதற்காகப் படிக்க வேண்டும்? எனக்கு இருக்கிற சுய அறிவு போதாதா? வேலைக்குப் போக வேண்டியவர்களுக்குப் படிப்பறிவு அவசியம். எனக்கு எதற்கு? ஏதாவது வாசிக்க வேண்டியிருந்தால் வாசிக்கவும், எழுத வேண்டியதை எழுதவும், கணக்கு எழுதவும் செயலாளர்களும், கணக்கர்களும் நம்மிடம் வேலை செய்கிறார்களே? நான் படிக்க அவசியமில்லையே" என்று பிரதாபன் பதில் சொன்னான்.

அவன் பாட்டியார் அடிக்கடி இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டதால் அவன் அப்படி சொன்னான். அவன் சொந்தமாக சிந்தித்து அப்படி எல்லாம் பேசியதாக எண்ணி அவன் தந்தையார் சந்தோஷப்பட்டார். வீட்டில் உள்ள எல்லோரும் அதை அறிந்து அவனைப் பாராட்ட ஆரம்பித்தார்கள். வேலைக்காரர்கள், கணக்கர்கள், செயலாளர்கள் எல்லோரும் வந்து அவனைப் புகழ்ந்தார்கள்.

பிரதாபனின் பாட்டியார் தான் சொன்னதுதான் அது என்பதை மறந்துவிட்டு, பிரதாபனின் சாமர்த்தியத்தை மெச்சி, அவனைத் தூக்கிக் கட்டிப் பிடித்து வாயாலும் பல்லாலும் முத்தங்கள் கொடுத்து அவனை மூச்சுத் திணற வைத்தார். அங்கே செல்லப்பிராணியாக இருந்த ஒரு குரங்கு பிரதாபனைப் பாட்டியார் தொந்தரவு செய்வதாக எண்ணிப் பாட்டியார் மேல் விழுந்து கடிக்க ஆரம்பித்தது. அதனால் பிரதாபனைப் பாட்டியார் விட்டு விட்டதால் பிரதாபன் அந்த மூச்சுத் திணறலில் இருந்தும் பற்கடியில் இருந்தும் தப்பித்தான்.

பிறகு பிரதாபனின் தாயார் இதைக் கேட்ட போது மிகவும் வேதனைப் பட்டார், "கல்வி பற்றி நீ நினைப்பது தவறு. கல்வி அறிவற்றவர்கள் மிருகங்களுக்கு சமம். அறிவியலையும், ஆன்மீகத்தையும் உணரக் கல்வி அவசியம். ஒளி இல்லாவிட்டால் கண்ணிருந்தும் ஒன்றையும் பார்க்க முடியாது. ஆழ உழுது பயிரிட்டால் தான் பலன் கிடைக்கும். உலோகத் தாதுக்களை உருக்கிப் புடம் போட்டால் தான் பயன் உண்டு. பட்டை தீட்டினால் தான் வைரம் ஒளி தரும். வெட்டித் திருந்தாத மண்ணில் புல்லும் பூண்டும் வளர்வது போல, கல்வி கற்காத மனதில் தீய பழக்கங்கள் வளரும். வேலைக்காரர்களை விட அதிகம் படிக்காவிட்டால் அவர்கள் செய்யும் தவறை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?" என்றெல்லாம் சொல்லிப் புரிய வைத்த பின் பிரதாபனின் தந்தையும் அவனுக்குக் கல்வி கற்பிக்கத் தீர்மானித்தார்.

ஆனால் அவனைப் பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்துப் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்தார். தாயாருக்கு கிராம காரியங்கள் பலவற்றை நிர்வகிக்க வேண்டி இருந்ததால் அவரால் பிரதாபனின் கல்வியை கவனிக்க முடியவில்லை.

அவனுக்கு செல்லம் கொடுத்தே பழக்கமான அவன் தந்தை, அவனுக்கு விருப்பமான நேரம் படித்தால் போதும் என்றும், அவன் படிக்காவிட்டால் தண்டனை கொடுக்கக் கூடாது என்றும் ஆசிரியரிடம் சொல்லி விட்டார். அதே சமயம் தினமும் பிரதாபனின் கல்வி அறிவும் வளர வேண்டும் என்ற நிபந்தனையால் பல ஆசிரியர்கள் நீக்கப் பட்டார்கள். இப்படி மாறி மாறி வந்ததால் பிரதாபன் தமிழின் பனிரெண்டு உயிரெழுத்தையும் கற்றுக் கொள்வதற்குள் பனிரெண்டு ஆசிரியர்கள் மாறிவிட்டார்கள்.

கடைசியாக வந்த ஆசிரியர் தன் மகனுடன் பிரதாபனின் வீட்டிலேயே தங்கி இருந்து பிரதாபனுக்கும் அவரது மகன் கனகசபைக்கும் சேர்த்து பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்.

இதனால் பிரதாபனின் பாட்டியார் ஒருநாள் ஆசிரியரைப் பார்த்து, "படித்துப் படித்து என் பேரனின் தொண்டை வறண்டு போவதால் இனி உமது மகன் படிக்கட்டும். என் பேரன் அதைக் கேட்டுக் கற்றுக் கொள்ளட்டும். அவனுக்குப் பாடம் தெரியாவிட்டால் அவனைப் பயமுறுத்த உமது மகனை அடிக்க வேண்டும்" என்று சொன்னார்.

அந்த ஏழை ஆசிரியர் வயிற்றுக் கொடுமையால் இந்த அநியாயமான நிபந்தனைக்குக் கட்டுப் பட்டார். பிரதாபனுக்குப் பாடம் தெரியாதபோதெல்லாம் கனகசபைக்கு அடிவிழும். பிரதாபன் சரியாகப் படித்த நாளும் இல்லை. கனகசபை அடிபடாத நாளும் இல்லை. அவன் தாங்க முடியாமல் ஒரு முறை "இந்த அடியெல்லாம் வயிற்றுப் பாட்டுக்காகத் தானே? அதனால் இனி வயிற்றிலேயே அடியுங்கள்" என்று அழுதான்.

பிரதாபன் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்துக்களைக் கற்றுக் கொள்வதற்குள் கனகசபையின் உயிரும் மெய்(உடல்)யும் மரணவேதனைப் பட்டன.

வெற்றிவளவன்

தொடரும்...

உதவி - சுகந்தி



அம்மா எனக்கு டிவியில் பார்த்தோமே அந்த விளையாட்டு பொம்மையை வாங்கித் தருகிறீர்களா? அம்மாவின் அருகில் போய் நின்றாள் ப்ரியா.
.அவள் டிவியில் பார்த்த அந்த பொம்மை அவ்வளவு அழகாக இருந்தது. அதை வைத்துக் கொண்டு இந்த அரையாண்டு பரிட்சை முடிவில் எப்படி பக்கத்து வீட்டு அனிதாவுடன் எப்படி விளையாடலாம் என்று கனவு காண ஆரம்பித்தாள் ப்ரியா.

ப்ரியா பரிட்சை சமயத்தில் இப்படி மசமசன்னு நிக்காதே சாப்பிட்டு ஸ்கூலுக்கு கிளம்பற வழியைப் பாரு அம்மா அதட்டினார்

அம்மா அந்த பொம்மைம்மா நாளைக்கு வாங்கித் தருவீங்களா எனக்கு அதை வைத்து விளையாட ரொம்ப ஆசையா இருக்கும்மா என்றாள் ப்ரியா

ப்ரியாக் குட்டி அம்மா சொல்கிறேன் என்ரு கோபித்துக் கொள்ளாதே நீ கேட்கும் பொம்மையின் விலை என்ன என்று உனக்குத் தெரியுமா?

அம்மா சொல்ல வந்தது ப்ரியாவிற்குப் புரிய்வைல்லை

ஓ தெரியுமே ரூ 350 மட்டுமே என்று சொல்லித் தானே டிவியில் விளம்பரம் செய்கிறார்கள். உற்சாகமாக சொன்னாள் ப்ரியா

அம்மா தலையைச் சாய்த்து புன்னகைத்தாள் ப்பூ இவ்வளவு தானா? அப்படின்னா நீயே வாங்கிக் கொள்ளலாமே? என்றார்

நானா? என் கிட்ட அவ்வளவு காசு எங்கேம்மா?

அது தான் உண்டியலில் காசு சேர்த்து வைத்து இருக்கிறாயே அதில் வாங்கிக் கொள் என்றார் அம்மா

அம்மா என்னிடம் இருநூறு ரூபாய் தான் இருக்கிறது. இன்னும் நூற்றைம்பது ரூபாய் எனக்கு எப்படிக் கிடைக்கும்? நீங்களே எனக்கு வாங்கிக் கொடுங்கள் அம்மா ப்ளீஸ் தாயைக் கொஞ்சினாள் ப்ரியா

ப்ரியா குட்டி உனக்கு போன மாதம் தான் பிறந்த நாளுக்க்கு நீ கேட்டாய் என்று வீடியோ கேம்ஸ் அப்பா வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் அதை நீ எப்படிப் பொறுப்பில்லாமல் போட்டிருக்கிறாய் பார் உன் காசை செலவு செய்து நீ வாங்கினால் தான் பொருளின் அருமை உனக்குத் தெரியும் பணம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதும் புரியும் அம்மா ப்ரியாவிற்கு அன்பாக விளக்கம் கொடுத்தார்

சோகத்தோடு தலையைத் தொங்கப் போட்டாள் ப்ரியா. அவளது தோள்கள் தொய்ந்தன. பொம்மை என்று எவ்வளவு ஆசையாய் இருந்தாள். அம்மா அவளின் ஆசையைப் புரிந்து கொள்ள வில்லையே அம்மாவின் மேல் கோபம் வந்தது ப்ரியாவிற்கு

கிளம்பு ப்ரியா எனக்கும் லேட்டாகி விட்டது அம்மா சொல்ல தொங்கிய முகத்தோடு பள்ளி செல்ல அம்மாவின் ஸ்கூட்டியில் ஏறினாள்.

பள்ளியில் தமிழ் ஆசிரியை பரிட்சைக்கு வரும் செய்யுள்களில் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார். ப்ரியாவின் கவனமோ பொம்மையின் மேல் தான் இருந்தது. தன் செல்லப் பெண்ணுக்காக அம்மா செலவு செய்ய மறுக்கிறார்களே என்றுத் தவிப்பாய் இருந்தது.

அப்போது தலைமை ஆசிரியை அங்கு வந்தார். தலைமை ஆசிரியரைப் பார்த்ததும் வகுப்பே அமைதியானது. கமலா மேடம் ஒரு நிமிடம் உங்கள் வகுப்பில் இருக்கும் கார்த்தியை கொஞ்சம் வெளியே வரச் சொல்லுங்கள் என்றார் ஆசிரியை தலை அசைக்க கார்த்தி பயந்து கொண்டே வெளியே வந்தாள். கார்த்தியைப் பற்றி வகுப்பில் உள்ள எல்லோருக்கும் தெரியும். அவளின் பெற்றோர் கட்டிட வேலை செய்பவர்கள். ப்ரியாவே கார்த்தியின் அம்மா கட்ட்டம் கட்டும் இடங்களில் வேலை செய்வதை பார்த்திருக்கிறாள்.

தலைமை ஆசிரியை கார்த்தியைத் திட்டிக் கொண்டிருந்தார். நீ இன்னும் பரிட்சைக்குப் பணம் கட்டவில்லை தெரியும் தானே

ஆமாம் என்று தலையாட்டினாள் கார்த்தி

ஏன் இன்னும் கட்டவில்லை கெடு முடிந்து இரண்டு நாளாகி விட்டது பரிட்ச்சை எழுதப் போகிறாயா இல்லையா?

குனிந்த தலையோடு அவமானத்துடன் நின்றிருந்தாள் கார்த்தி.

சொல் ஏன் இன்னும் பணம் கொண்டு வரவில்லை கோபமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர்

மறந்து விட்டேன் அம்மா மெல்லிய குரலில் பதிலளித்தாள் கார்த்தி.

மறந்து விட்டாயா? என்ன பொறுப்பினமை. உன் பெற்றோர் எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள் என்று தெரிந்திருந்தும் நீ இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாயே என்ற தலைமை ஆசிரியர். நீ இன்று முழுவதும் வெளியே நின்றே பாடம் கேள் அப்போது தான் நாளை உனக்கு மறக்காது. என்று கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் தலைமை ஆசிரியர்.

பள்ளி முடியும் வரையில் வெயிலில் வெளியே நின்று கொண்டிருந்த கார்த்தியைப் பார்க்க பாவமாக இருந்தது ப்ரியாவிற்கு. மற்ற குழந்தைகளைப் போல் அவள் கார்த்தியைக் கிண்டல் செய்யவில்லை மாலையில் தன்னை அழைக்க வந்த தாயிடம் நடந்ததைச் சொல்லி. அம்மா நாம் இன்று கார்த்தியை வழியில் இறக்கி விட்டு விடலாம். பாவம்மா அவ்ள் இன்று முழுவதும் நின்று கொண்டேயிருந்தாள் கால் வலிக்கும் என்றால் ப்ரியா. தாய்ம் சம்மதிக்கவே இருவரும்ஸ்கூட்டியில் தாயுடன் பயணம் செய்தனர். காற்று வேகமாக முகத்தில் மோத கார்த்தி சந்தோஷமாய் சிரிப்பதைப் பார்த்த ப்ரியாவிற்கும் சந்தோஷமாக இருந்தது. கார்த்தியின் பெற்றோர் வேலை செய்யும் இடத்தில் வண்டியை நிறுத்திய ப்ரியாவின் தாயார். கார்த்தியின் தாயிடம் விஷயத்தைச் சொன்னார்

அட எம்புள்ள மறக்கலம்மா எங்க கையில தான் துட்டு இல்லை. என்னாத்தைப் பண்றது? ஏழைங்க நாங்க புள்ளையை படிக்க வைக்கணுன்னு ஆசைப் படுறோம் ஆனா கையில் காசு இல்லையே அங்கலாய்த்தார் கார்த்தியின் அம்மா

கேட்டுக் கொண்டிருந்த ப்ரியாவிற்கு மனம் மிகவும் வருத்தமாக இருந்தது. கார்த்திக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று எண்ணினாள். அம்மாவின் காதில் தனக்குத் தோன்றியதை சொன்னாள். ஆச்சிரியமாக புருவத்தைத் தூக்கிய அம்மா அவள் சொன்னதிற்கு சம்மதித்தாள். உடனே இருவரும் வீட்டிற்கு சென்றார்கள் ப்ரியாவின் உண்டியலை அவள் எடுத்துக் கொள்ள இருவரும் கட்டட வேலை நடக்கும் இடத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

ப்ரியா தன் உண்டியலை கார்த்தியிடம் நீட்டினாள். கார்த்தி இதில் இருநூறு ரூபாய் இருக்கிறது. இதை நீ பரிட்ச்சைக்குப் பணம் கட்ட வைத்துக் கொள் என்று சொல்லிக் கொடுத்தாள்.தயக்கத்துடன் கார்த்தி அதை வாங்கிக் கொண்டாள்.

அதைப் பார்த்த அவள் தாய் இல்லைம்மா எங்களுக்குப் பிச்சை வேண்டாம். எப்படியும் பணம் கட்ட முடியாமல் இவள் படிப்பு நின்றுத் தான் போகும். அது எப்போது நின்று போனால் என்ன? நாளையே இவள் படிக்கப் போக வேண்டாம். எங்களோடு வேலை செய்தாலாவது கூலியாவது கிடைக்கும்.என்று வருத்தத்தோடு சொன்னார்

உடனே ப்ரியா இல்லைஆண்ட்டி இது நான் என் தோழி கார்த்திக்கு நான் கொடுக்கும் அன்பளிப்பாக எடுத்துக் கொள்ளுங்க்ள். அவள் படிப்பை நிறுத்தவேண்டாம் ப்ளீஸ் என்று கெஞ்ச அநதம்மாவும் ப்ரியா கொடுத்த பணத்தை மனம் இல்லாமல் வாங்கிக் கொண்டாள்.

ப்ரியா அதோடு நிற்கவில்லை மறுநாள் தலைமை ஆசிரியரை சந்தித்துப் பேசினாள் அம்மா கார்த்தியின் பெற்றோர்வசதியில் குறைந்தவர்கள் அவர்களால் அவள் படிப்பிற்கு பணம் கட்ட முடியாது. எனவே அவளுக்கு என்னால் ஆன உதவியைச் செய்யப் போகிறேன்.என்று தைரியமாக சொன்னாள்.

ப்ரியாவை ஆழமாக பார்த்த தலைமை ஆசிரியை யோசித்துத் தான் பேசுகிறாயா ப்ரியா ஒரு பெண்ணை படிக்க வைப்பதற்கான செலவு எவ்வளவு என்று உனக்குத் தெரியுமா? அது சிறு பிள்ளை உன்னால் முடியுமா? என்று கிண்டலாகக் கேட்டார்.

உடனே ப்ரியா அம்மா என்னால் முடிந்து தான் ஆக வேண்டும். என்னால் முடிந்த் அளவு கார்த்திக்கு உதவி செய்வேன். அந்தக் கடமை எனக்கு இருக்கிறது என்றாள்.

அது என்னம்மா கடமை? கார்த்தியின் பெற்றோருக்கு இல்லாத கடமை மீண்டும் எகத்தாளமாகவே கேட்டார். தலமை ஆசிரியை கார்த்தி நல்ல முறையில் படிக்க முடியாவிட்டால் அவள் ஒரு குழந்தைத் தொழிலாளியாக ஆக வாய்ப்பு இருக்கிறது என்பதை என் தந்தை எனக்கு புரிய வைத்தார். ஒரு தோழி என்ற முறையில் அதை என்னால் முடிந்த அளவு தடுக்க வேண்டியக் கடமை எனக்கு இருக்கிறது குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலத்தின் தூண்கள் என்று நீங்கள் தானே அன்று சொன்னீர்கள். கார்த்தி நல்ல முறையில் படித்தால் எதிர்காலத்தில் நம் நாட்டிற்கும் நல்லது தானே. என்றாள் ப்ரியா

ப்ரியா பேசுவதையேக் கேட்டுக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் அதற்குத் தேவையான பணத்திற்கு எங்கே போவாய்?

யோசித்துப் பார்த்தால் ஒருவருக்கு நல்ல வழியில் பயன் படுத்தும் பணத்தை நான் எப்படி எல்லாம் வீணாக்குகிறேன் என்றும் புரிந்து கொண்டேன்.நான் எனக்காக வீணாய் செய்யும் செலவுகளை எல்லாம் நிறுத்தி அந்தப் பணத்தை சேமிக்கப் போகிறேன். அது போல மற்ற மாணவர்களையும் செய்யத் தூண்ட வேண்டும். அதற்குத் தான் எனக்கு உங்கள் உதவித் தேவைப்படுகிறது.

தெளிவாய்ப் பேசும் ப்ரியாவைப் பார்த்த தலைமை ஆசிரியர் அவளை மதிப்புடன் பேசினார் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்

நான் இங்கே கார்த்தியின் பெயரில் ஒரு அட்டைப் பெட்டியை வைக்க வேண்டும். அதில் பள்ளி மாணவர்கள் தங்களின் பழைய நோட்டு புத்தகங்கள், எழுதி வீணாக்கப்பட்ட காகிதங்கள். எல்லாவற்றையும் போட்டு வைத்தால், கார்த்தி அவறறை பழைய செய்தித் தாள் கடையில் விற்று அதை தன் படிப்பிற்குப் பயன் படுத்தலாம். மற்ற வகையில் கார்த்திக்கு உதவவும் மாணவர்களை இது தூண்டும் கார்த்தியின் பெற்றோருக்கும் பண சிரமம் குறையும் என்று தன் மனதில் இருந்த திட்டத்தைத் தலைமை ஆசிரியருக்கு விளக்கினாள் ப்ரியா.

அவளுடைய தீர்க்கமான யோசனையைக் கேட்ட தலைமை ஆசிரியர் அவளை மெச்சினார்

ப்ரியா நீ எதிர்காலத்தில் ஒரு நல்ல தலைவியாக வருவாய் என்று நினைக்கிறேன். உன் கருத்துக்களுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். நீ சொல்வதும் சரிதான் குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத நிலை நம் நாட்டில் கண்டிப்பாக வர வேண்டும். அதனால் உன் இந்த சிறிய முயற்சி வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். நானும் என்ன முறையில் கார்த்திக்கு உதவ முடியும் என்று பார்க்கிறேன் என்று உறுதி அளித்தார்.

ப்ரியா சந்தோஷமாக வெளியே ஓடினாள். இந்த விடுமுறைக்கு விளையாட பொம்மைக்கு பதில் ஒரு நல்ல தோழி கிடைத்தாள்.

குழந்தைகளே நீங்களும் ப்ரியாவைப் போல சுய சிந்தனையோடு நீங்களும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தோடு செயல் படுங்கள்

அறிவிலா அறிவன் - சுகந்தி


விளையாடிவிட்டு வந்த அறிவன் கிரிக்கெட் மட்டையை வாசலிலேயே வீசிவிட்டு வீட்டுக்கு உள்ளே நுழைந்தான்.அவன் காலுக்கடியில் பந்து உருண்டோடியது.
வேகமாக உள்ளே ஓடி வந்தவன் அம்மா பசிக்குது என்ற படி சப்பாட்டு மேஜையில் போய் உட்கார்ந்தான்.

டேய் அறிவா, விளையாடிட்டு வந்ததும் கைகால் கழுவி விட்டு சாப்பிட வா என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். சமையலறயிலிருந்து வந்த அம்மா கோபப்பட்டார்.

அம்மா எப்பவுமே இப்படித் தான் கோபப் பட்டுக் கொண்டேயிருப்பாள்; அவளுக்கு வேறு வேலையே கிடையாது; சீக்கிரம் சாப்பிட்டு விட்டு டி.வி. பார்க்க வேண்டாமா அவன். முணுமுணுத்துக் கொண்டே கைகழுவச் சென்றான் அறிவன். இனி அப்பா வந்ததும் ஒரு பெரிய அறிவுரைப் படலமே நடக்கும். பெற்றோர் இருவரும் சரியான கழுத்து அறுவை. சலிப்புடன் உணவை உட்கொள்ள உட்கார்ந்தான் அறிவன்.

அறிவன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். தாய் தந்தையருக்கு ஒரே பிள்ளை. அதனால் எல்லாமே அவனுடைய உரிமை என்றே அவன் நினைப்பான். தான் செய்வது எல்லாமே சரி என்று நினைப்பான். அவனைப் பற்றி அவனுக்குத் தற்பெருமை அதிகம். மற்றவர்களை அலட்சியமாக நடத்துவான்.

சாப்பிட்டு விட்டுத் தொலைக் காட்சி முன்னால் உட்கார்ந்திருந்த மகனை ஏறிட்டுப் பார்த்தார் அலுவலகத்திலிருந்து உள்ளே வந்த அவன் தந்தை. தந்தையை அலட்சியமாக ஏறிட்டான் அறிவன். எதுவும் பேசாமல் உள்ளே சென்றார் தந்தை. அவரை வெற்றி கொண்டுவிட்டது போலப் பெருமிதம் கொண்டான் அறிவன். ஆனாலும் அம்மா ஏதாவது சொல்ல அடுத்த அட்வைசஸ் எப்போது வரும் என்று அவன் எதிர்பார்த்துக் கொண்டு அவர்களைச் சொற்களால் தாக்குவதற்குத் தயாராய் இருந்தான். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

மறுநாள் மாலை விளையாடச் செல்லும் போது அவனுடைய கிரிக்கெட் மட்டையைக் காணவில்லை. சரி இருக்கட்டும் என்று நினைத்தவனாய் விளளயாடச் சென்றான். மைதானத்தில் அணியினர் அனைவரும் கூடி இருந்தனர். அறிவன் தான் கடைசியில் வந்து சேர்ந்தான். மட்டையைத் தேடியதில் நேரமாகி விட்டது.

அருகிலிருந்த நண்பன் மூர்த்தியின் மட்டையை வாங்கிக் கொண்டு களத்தில் இறங்கினான். அன்று அவன் நன்றாக அடித்து விளையாடினான். அவுட் ஆகவே இல்லை. அவனுக்கே தன்னைப் பற்றிப் பெருமையாக இருந்தது. மூர்த்தியிடம் மட்டையைத் திருப்பிக் கொடுத்தவன் ஒரு நன்றி கூடச் சொல்லாமல் வீட்டுக்குத் திரும்பினான். மூர்த்தியின் முகம் களையிழந்து இருப்பதையும் அவன் கவனிக்க வில்லை. அவனுடைய மட்டையைத் தேடி கண்டுபிடிக்க வேண்டுமே! என்ற அவசரத்தோடு வீட்டிற்கு வந்தான்.

அவன் அழுது அடம்பிடித்து வாங்கிய அந்த விலை உயர்ந்த கிரிக்கெட் மட்டையை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த மட்டை தான் அவனுக்கு அணியின் தலைவன் என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்தது. மட்டையைப் பற்றிப் பெற்றோரிடம் கேட்க அவனுக்குத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. அம்மா அவனுக்குப் பொறுப்பில்லை என்று திட்டுவாள். அப்பாவோ இவன் அழுது அடம் பிடித்து வாங்கியதைச் சுட்டிக் காட்டுவார். அவனாகவே மட்டையைத் தேடிப்பார்த்தான். கிடைக்கவில்லை. என்ன செய்வது என்றே அறிவனுக்குத் தெரியவில்லை.

வரும் சனி ஞாயிறுகளில் அவனுடைய அணிக்கும் அடுத்து அடுத்து இருக்கும் இறண்டு அணிகளுக்கும் இடையில் அருகில் இரு போட்டி நடக்கவிருக்கின்றன. அறிவனை அவன் தலைவன் என்ற முறையில் அணியினர் மிகவும் நம்பி இருந்தனர். அறிவனோ தனது மட்டையை மிகவும் நம்பியிருந்தான். விலை உயர்ந்த அந்த மட்டையைக் கொண்டு அடித்தால் நிறைய ரன்கள் வரும் என்று நம்பினான். இப்போது என்ன செய்வது என்று அறிவனுக்குத் தெரியவில்லை.

மாலை விளையாடப் போன இடத்தில் அவன் மறுபடியும் மட்டை இல்லாமல் விளையாட வந்திருப்பதைப் பார்த்த அவனது அணியினர் அவன் மேல் எரிச்சல் பட்டனர்.

டேய் போடா அறிவா, நீ போய் உன் மட்டையை எடுத்துக் கொண்டு வா. இல்லை என்றால் நாங்கள் விளையாடியதும் கடைசியில் விளையாடு. மட்டை இருப்பவர்களுக்குத் தான் முதல் வாய்ப்பு.

போடா நான் தான் கேப்டன். நான் தான் முதலில் விளையாடுவேன் என்ற அறிவன் நின்று கொண்டிருந்தவனின் மட்டையைப் பிடுங்கினான்.

அறிவா, இன்று முதல் ரவி தான் நம் அணிக்குத் தலைவன். என்றான் வினோத் என்ற அணியிலிருந்த ஒரு நண்பன்.

"ஆமாண்டா" என்று மற்றவர்கள் அவனை ஆமோதித்தனர். “ரவி நல்லா சுழல் பந்து போடுவான். அவன் நல்லா ஓடி ஓடி ரன்னும் எடுப்பான். உன்னை மாதிரி எங்களை விரட்டுவதும் இல்லை என்றனர்.

அவமானமாக இருந்தது அறிவனுக்கு. அப்படியானால் என்னை அணியிலிருந்து வில்க்குகிறீர்களா? என்று கேட்டான்.

"இல்லை இல்லை. உன்னிடம் மட்டை இல்லை. அதனால் நீ கடைசியில் ஆடுபவனாக இரு" என்றனர். "நீ வேகமாகப் பந்தை அடிப்பாயே, அதனால் நீ கடைசியில் ஆடினால் நல்லது தானே" என்று அவனை சமாதனப் படுத்தவும் முயன்றனர்.

"நீங்களும் வேண்டாம், உங்கள் கிரிக்கெட்டும் வேண்டாம்." என்று ஆத்திரமாகக் கத்தி விட்டு அறிவன் வீட்டுக்கு ஓடி விட்டான்.

இரவு சாப்பிடாமல் சாதத்தை அளைந்து கொண்டிருந்த அறிவனை அவன் தந்தை யோசனையோடு பார்த்தார். "என்ன அறிவா? என்ன உடல் நலம் சரியில்லையா? என்று கேட்டார். எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டிருந்தான் அறிவன்.

"என்ன அறிவா, உனக்குப் பள்ளியில் ஏதாவது பிரச்சனையா? மதிப்பெண்கள் குறைவாக வாங்கிவிட்டாயா? போனால் போகிறது அடுத்த முறை நன்றாகப் படி" என்றார் சாப்பாடு பறிமாறிக் கொண்டிருந்த தாய்.

நிலமை புரியாமல் பேசும் இருவரையும் பார்க்க அறிவனுக்கு எரிச்சல் தான் வந்தது. கையிலிருந்த சாதத்தை உதறிவிட்டு எழுந்து போய்த் தன் அறைக்குள் உட்கார்ந்தான். சிறிது நேரம் க்ழித்து அவன் தந்தை அவன் அருகில் வரும் போது அவன் அழுது கொண்டிருந்தான்.

அவன் தோளில் அன்பாய் கைவைத்த அவன் தந்தை, "அழாதே அறிவா? பிரச்சனைகளைக் கண்டு அழுதால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது."

அவர் கையைப் பட் என்று தட்டிவிட்ட அறிவன், "உங்களுக்க்கு எப்பவுமே எல்லாமே வெற்றி, வெற்றி, வெற்றி தான். ஏன் இப்படி வெற்றி வெறி பிடித்து அலைகிறீர்கள். தோல்வி அடைந்தால் என்ன? நல்லாப் படிக்கலைன்னா என்ன? முதல் ரேங்க் வாங்காட்டி என்ன? நான் தோத்துப் போனா உலகமா இடிஞ்சு விழுந்துடும்?" ஆத்திரமாகக் கத்தினான்.

மகனை அதிர்ச்சியுடன் பார்த்த தந்தை, "அறிவா, நாங்கள் சொல்வது எதுவும் உனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். நீ எங்களை வெறுக்கிறாய் அதனால் நான் உன்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஒன்று புரிந்து கொள். வெற்றி என்பது சான்றிதழ்களிலோ, தங்கக் கொப்பைகளிலோ இல்லை. நீ வாங்கும் மதிப்பெண்களிலும் இல்லை. செம்மறி ஆடுகள் போல் மற்றவர்களைப் பின்பற்றுவதால் வருவதல்ல வெற்றி. மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு உன் தனித் தன்மையோடு நீ சிந்தித்துச் செயல் பட வேண்டும். அது தான் உன்னுடைய வெற்றி. அது நீ செய்யும் ஒவ்வோரு செயல்களிலும் இருக்கிறது. நீ செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னையும் சந்தோஷப்படுத்தி உன்னைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துமானால் அது தான் வெற்றி." என்றவர் அங்கிருந்து வேகமாக நகர்ந்துவிட்டார்.

அறை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அவனுடைய தாய் உள்ளே வந்து அவன் படுக்கை மேல் கிரிகெட் மட்டையை வைத்தார். அது நடுவில் பிளந்து இரண்டாக உடைந்து இருந்தது. இது தான் உன் கோபத்திற்கும் எரிச்சலுக்கும் காரணம் என்று நினைக்கிறேன். வாசலிலேயே நீ தினம் வீசி விடுவாய் நான் தான் அதை ஒழுங்காக எடுத்து வைப்பேன். அன்று மட்டை உடைந்து விட்டதைப் பார்த்தேன். தெரிந்தால் நீ வருத்தப்படுவாய் என்று நினைத்து உன்னிடம் சொல்லவில்லை. உனக்கு இன்னொரு மட்டை வாங்கித் தருமாறு உன் தந்தையிடம் இரண்டு நாளாக சொல்லிக் கொண்டிருந்தேன். நீ இன்று அவரையே எதிர்த்துப் பேசியது கண்டு என் மனம் மிகவும் வருந்துகிறது. இந்த ஆத்திரத்தாலும் கோபத்தாலும் பல நல்ல வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்." என்றவர், "நீ விளையும் பயிர் என்று நாங்கள் செய்த செயல்கள் எல்லாம் வீணாகி விட்டனவோ என்று தோன்றுகிறது." என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

திகைத்து நின்றான் அறிவன்.

அவன் தாய் அவனை எதற்கும் உதவாத ஒரு களைச்செடி என்று சொல்லாமல் சொல்லி விட்டாரே. அழுகையாக வந்தது அவனுக்கு, படுக்கை மேலிருந்த மட்டையை எடுத்துப் பார்த்தான். அவன் பொறுப்பில்லாமல் தினம் வீசி எறிந்து எறிந்து கீறல் விழுந்து, அதுவே மட்டை உடையக் காரணமாக இருந்திருக்கிறது. கண்களில் கண்ணீர் ஒழுக அதை எடுத்துப் பார்த்தான். அப்பா சொல்வது சரிதானே, அவனது பொறுப்பற்ற செயலாலே தோற்றுப் போய் நிற்கிறான். வாய்ப்புக்களை இழந்து நிற்கிறான்.

அடுத்த முறை அவனுக்கு எப்போது வாய்ப்பு வருமோ?

குழந்தைகளே, அறிவனின் செயல்களிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். செய்யும் ஒவ்வோரு சிறு வேலையையும் செவ்வனே செய்யுங்கள்

குறிக்கோள் - சுகந்தி



காலை அசெம்பெளியில் பள்ளியின் முதல்வர் சிவராமனைப் பாராட்டிக் கொண்டிருந்தார். சிவராமன் அந்தப் பள்ளியின் சிறந்த விளையாட்டு வீரன். அண்மையில் மாவட்ட அளவில் நடந்த போட்டியில் அவன் தங்கப் பதக்கம் வாங்கியிருந்தான். அதை மகிழ்சியோடு சொல்லி சிவராமனை புகழந்து பேசினார் முதல்வர், குழந்தைகளே, சிவராமன் உங்களுக்கெல்லாம் நல்ல எடுத்துக் காட்டு. தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு சிவராமன் அயராது பாடு பட்டதை நீங்கள் அறிவீர்கள். அவனுடைய முயற்சியின் பலனால் சிவராமன் மட்டுமல்ல, நம் பள்ளிக்கே பெருமை. நீங்கள் ஒவ்வொருவரும் சிவராமனைப் போல வெற்றி பெற உங்களிடம் திறமை இல்லாதிருக்கலாம்.

ஆனால் ஒரு குறிக்கோள் உங்களுக்கு வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும். அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நாம் தினமும் செயல் பட்டால் நாமும் முன்னேறலாம், நாடும் முன்னேறும் என்று சொல்லி, சபாஷ் சிவரமா! இதே போல் இன்னும் பல முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சிவராமனின் தோளில் தட்டி அவனை உற்சாகப் படுத்தினார் முதல்வர்.

சந்தோஷமாய் நண்பன் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவராமனின் நண்பன் முகிலன். தன் நண்பனை நினைக்கையில் அவனுக்குப் பெருமையாக இருந்தது. அதே சமயம் ஆதங்கமாகவும் இருந்தது. சிவராமனைப் போல தன்னால் எதையும் சாதிக்க முடியவில்லையே என்று அவனுக்கு ஏக்கமாக இருந்தது. ஆனாலும் முதல்வரின் வார்த்தைகள் அவனுக்கு நம்பிக்கையூட்டின. ஒரு குறிக்கோளோடு பாடு பட்டால் எதையும் சாதிக்கலாம் என்றாரே முதல்வர். முகிலன் முடிவெடுத்தான். அவனும் எதையாவது சாதிக்க வேண்டும் ஒரு முறையாவது சிவராமனைப் போலப் பள்ளி முதல்வர் கையால் பாராட்டுப் பெற வேண்டும் என்பதே அவன் குறிக்கோள்.

அசெம்பளி கலைந்து மாண்வர்கள் அவரவர் வகுப்புக்குச் சென்றனர். சிவராமனை வகுப்பில் ஆசிரியரும் மற்ற மாணவர்களும் மறுபடியும் பாராட்டினர். நண்பனுக்காக மனம் மகிழ்ந்த போதும் தானும் இதைப் போல் கண்டிப்பாய் பாராட்டப் பட வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான் முகிலன். பள்ளியில் பாடங்கள் நடக்கும் போதும், மதிய உணவு உண்ணும் போதும் மாலையில் சைக்கிளில் வீடு திரும்பும் போதும் அவனுடைய அடி மனதில் இதே சிந்தனையாக இருந்தது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தான் முகிலனுக்குத் தெரியவில்லை.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து, கணக்கு வகுப்பு முடிந்து வெளியே செல்கையில் கணக்கு ஆசிரியர் முகிலனை அழைத்தார். முகிலா, நீ இன்று வீட்டுக்குப் போகும் முன் என்னை வந்து பார்த்து விட்டுப் போ என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். முகிலனுக்கு ஆசிரியர் தன்னை எதற்கு இப்படித் தனியாக அழைக்கிறார் என்று தெரியவில்லை. மனம் சிறிது கலக்கமாயிருந்தாலும் மாலையில் அவரை மறக்காமல் காணச் சென்றான். முகிலனைக் கண்ட கணக்கு ஆசிரியர், வா முகிலா, வா உனக்காகத்தான் காத்திருக்கிறேன் என்று அன்புடன் சொன்னார். முகிலனுக்கு மனம் திடமானது. தான் எதுவும் தவறு செய்யவில்லை அதனால் தான் ஆசிரியர் தன்னிடம் கோபப் படவில்லை என்று நினைத்துக் கொண்டு ஐயா, என்னை எதற்காக வரச் சொன்னீர்கள்? என்று கேட்டான்.

இதோ, இது உன்னுடைய கணக்குப் பயிற்சிப் புத்தகம் தானா என்று பார்? என்று அவனிடம் ஒரு நோட்டை நீட்டினார். அது முகிலனுடைய கணக்குப் பயிற்சிப் புத்தகம் தான். ஆமாம் ஐயா, இது என்னுடையது தான் என்றான் முகிலன் அப்படியானால் பார் என்ற ஆசிரியர் அவரே பயிற்சிப் புத்தகத்தைத் திறந்து காண்பித்தார். அவர் திறந்து காட்டிய பக்கங்களைப் பார்த்த முகிலன் தலை குனிந்தான். பயிற்சிப் புத்தகத்தின் கணக்குப் பக்கத்தின் ஓரப் பகுதிகளில் வெறுமையாக இருக்க வேண்டிய எல்லா இடத்திலும் கிறுக்கப் பட்டிருந்தது. அவை கிறுக்கல் என்று சொல்வதற்கில்லை. சின்ன சின்னதாய் படங்கள். மேஜை மேலும் இருக்கும் பேனா, சாக்பீஸ், வகுப்பறை ஜன்னல் ஜன்னல் வழியாகத் தெரியும் காட்டு சாமந்திப் பூ, பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மாணவனின் தலை, அவனுடைய புத்தகங்கள் என்று பயிற்சிப் புத்தகத்தின் மமூலையில் எல்லாம் வரையப்பட்டிருந்தது. முகிலனுக்கு அவமானமாக இருந்தது. அவன் வகுப்பில் பாடத்தை சரியாக கவனிக்கவில்லை என்று தானே ஆசிரியர் நினைத்திருப்பார். அதனால் தான் அவனைத் தனியாகக் கண்டிக்க ஆசிரியர் அழைத்து இருக்கிறார் என்பதை உணர்ந்தவன், ஐயா என்னை மன்னித்து விடுங்கள். நான் இனி வகுப்பு நேரத்தில் இப்படி செய்ய மாட்டேன் பாடங்களை ஒழுங்காக கவனிப்பேன் என்றான் கம்மியக் குரலில்.

அவன் வருத்தப் படுவதைக் கண்ட ஆசிரியர், முகிலா, நீ கணக்கு வகுப்பில் படம் வரைந்தது தவறு என்றாலும், நீ உன்னுடைய கணக்குகள் அனைத்தையும் சரியாகவே போட்டிருப்பதால் உனக்கு ப்பாடம் புரிந்த பின் தான் இதை நீ வரைகிறாய் என்று நினைக்கிறேன். தேர்வுகளிலும் நீ நல்ல மதிப்பெண்ணே வாங்கியிருக்கிறாய் என்பதால் உன்னை மன்னித்தேன். ஆனால் இனிப் படம் வரைவதற்கு என்று தனியாக ஒரு புத்தகத்தைப் பயன் படுத்து" என்றபடி ஒரு நோட் புக்கை அவனிடம் கொடுத்தார். "இனிப் படம் வரைய தோன்றும் போதெல்லாம் இந்த புத்தகத்தில் வரை. அப்போது கண்ட இடத்திலெல்லாம் வரைய மனம் வராது. அது மட்டுமல்லாமல் மனதை ஒருமைப்படுத்தி வரையவும் முடியும். உன்னுடைய திறமை பொலிவு அடைவதையும் நீ கண்கூடாகப் பார்க்க முடியும்" என்றவர் "படம் வரைவதை மட்டும் நிறுத்தாமல் செய். நீ பெரிய ஓவியனாக வருவாய்" என்று முகிலனை வாழ்த்தி அனுப்பினார்.

ஆசிரியரின் அறையை விட்டு வெளியே வந்த முகிலன் ஒரு புறம் ஆசிரியரின் வாழ்த்தினால் மனம் மகிழந்தாலும் நிஜத்தில் மனம் வாடினான். இவன் படம் வரையும் திறமையை வளர்த்துக் கொண்டால் அவன் பெரியவனானதும் தானே சாதிக்க முடியும். அவன் பள்ளி மாணவனாக இருக்கும் போது சாதித்து முதல்வர் கையால் பாராட்டுப் பெற முடியாதே! அவன் எப்படியாவது எதையாவது சாதித்து முதல்வரிடம் பள்ளி மாணவர்கள் அனைவர் முன்னிலையிலும் பாராட்டுப் பெற வேண்டும் என்பதே அவனுடைய குறிக்கோள். மனம் சோர்ந்தாலும் முகிலன் கணக்கு ஆசிரியரின் அறிவுரையைக் கைவிடவில்லை. அவன் எங்கு சென்றாலும் படம் வரைய அவர் கொடுத்த புத்தகத்தை எடுத்துச் சென்றான். படம் வரையத் தேவையான பென்சில்கள் அவனிடம் எப்போதும் தயாராக இருந்தன. எங்கே சும்மா இருக்க ஒரு நிமிடம் கிடைத்தாலும் எதிர் உள்ள பொருட்கள், மனிதர்கள், மரங்கள், மாடு, சைக்கிள், என்று எதைப் பார்த்தாலும் வரைய ஆரம்பித்தான்.

படம் வரைய வரைய அவனுடைய வேகமும் நுணுக்கமும் வளர்ந்தன. அவன் போடும் ஒவ்வோரு கோடும் ஒவ்வோரு வளைவும் அவனுடன் கதை பேசின. தான் வரையும் ஓவியத்தோடு அவன் ஒன்றிப் போனான். அவன் எப்போதுபார்த்தாலும் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்த அவன் நண்பர்கள் அவனை அணுகி தங்களை வரைந்து தருமாறு கேட்டனர். முகிலனும் மகிழ்ச்சியுடன் வரைந்து தருவான். ஓவியம் வரைவதில் அவன் முனைப்பாக இருந்தாலும் அவன் குறிக்கோளை மறந்து விடவில்லை. ஒரு நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்தான்.

அன்று ஞாயிறு.

முகிலன் தன் தாயுடன் பாட்டி வீட்டுக்குச் செல்வதற்காகp பேருந்து நிழல் குடைக்குள் காத்திருந்தான். அப்படிக் காத்திருக்கும் வேளையில் அங்கிருந்தவர்களின் முகத்தை ஆழமாகக் கவனித்தான். அவர்கள் முகத்தை வரைய அவனுடைய கைகள் துறுதுறுத்தன. மரத்தடி டீக்கடை, டீக்கடை வாசலில் உட்கார்ந்திருந்திருந்தவரின் முதுகு, அவர் பக்கத்தில் வாலாட்டிக் கொண்டிருந்த நாய். மரத்தில் சாய்ந்திருந்த புகை பிடிக்கும் மனிதன் என்று ஒவ்வோருவரையும் பார்க்கப் பார்க்க அங்கே அப்படியே உட்கார்ந்து எல்லாவற்றயும் இந்த வினாடியே படம் வரைய அவன் மனம் ஏங்கியது. ஆனால் அம்மா தடுத்து விட்டார். பேருந்து வரும் சமயம் கவனம் சிதறி விட்டால் பேருந்து போய் விடும், எனவே கொஞ்சம் பொறுமையாக இருக்கும் படி முகிலனிடம் கூறினார். பாட்டி வீடு போய் இறங்கியதும் எவ்வளவு வேண்டுமானலும் வரைந்து கொள் என்று விட்டார் அவர்.

"ஐயோ என் செயின்"

என்று தீடிரென்று அங்கே நின்று கொண்டிருந்த ஒரு பாட்டி அலறினாள். அனிச்சையாக அம்மா அவனைப் பாதுகாப்பாக, தன் தொடையோடு அணைத்துக் கொண்டாள். எல்லோர் கவனமும் அந்தப் பாட்டியிடம் திரும்பியது. தூரத்தில் ஒருவன் ஓடுவது தெரிந்தது. தாயின் சேலைக்குள் இருந்த படி எட்டிப் பார்த்தான் முகிலன். டீக்கடை மரத்தின் மேல் சாய்ந்திருந்தானே, அவன் தான் பாட்டியின் செயினை அறுத்துக் கொண்டு ஓடுகிறான் என்று முகிலன் அடையாளம் கண்டு கொண்டான். ஒரு சிலர் அந்தத் திருடனின் பின்னால் ஓடி அவனைப் பிடிக்க முடியாமல் தோற்றுத் திரும்பினர்.

பாட்டி கழுத்தைத் தடவிய படி அழுது கொண்டு நின்றிருந்தாள். அங்கு நடந்த களேபரத்தைக் கண்டு ஒரு காவலர் அங்கு வந்தார். ஆளுக்கு ஆள் அவரிடம் நடந்ததைச் சொன்னார்கள். சரி, உங்கள் யாருக்காவது அவனை அடையாளம் காட்ட முடியுமா? சரியான முறையில் அடையாளம் காட்ட முடியாத படி சாதாரணமாக அவர்கள் நடந்து கொள்வதால் தான் இந்த மாதிரி சில்லறைத் திருடர்கள் தப்பித்து விடுகிறார்கள் என்றார் அவர். இல்லையே சார், சரியாப் பார்க்கலையே, பேருந்து வருகிறதா என்று பார்ப்பதிலேயே தான் எங்கள் கவனம் இருந்தது என்று பெரியவர்கள் சொல்ல, முகிலன் முன் வந்தான், நான் அந்தத் திருடனை நன்றாகக் கவனித்தேன். என்னால் அவனை அடையாளம் காட்ட முடியும் என்ற படி அம்மாவின் பையிலிருந்த நோட்டை எடுத்து, நிமிடங்களில் மரத்தின் மீது சாய்ந்திருந்த அந்த ஆளை வரைந்து காவலரிடம் கொடுத்தான்.

இவன் தான், இவன் தான் என்று முகிலன் வரைவதை வேடிக்கை பார்த்தவர்கள் கூறக் காவலர் பெருமையாக முகிலன் தோளில் தட்டிக் கொடுத்த படி, இவன் இந்த மாதிரித் திருடுகளில் அடிக்கடி ஈடுபடுபவன். இனி அவனை எளிதாகப் பிடித்துவிடலாம். உங்கள் செயினையும் மீட்டு விடலாம் பாட்டி என்று அழுது கொண்டிருந்த பாட்டியை சமாதானப்படுத்தினார். முகிலனின் தாய் பெருமையோடு மகனைக் கட்டிக் கொண்டார். முகிலன் தன் தாயை மகிழ்சியோடு கட்டிக் கொண்டான்.

அவன் தன் குறிக்கோளில் வெற்றி பெற்று விட்டான் என்று சொல்லவும் வேண்டுமா?

மழலைகளே நினைவில் கொள்ளுங்கள்.

ATTITUDE is every thing!

Be care ful of your thoughts, for your thoughts become your words.

Be careful of your words, for your words become your actions.

Be careful of your actions for your actions become your habits.

Be careful of your habits, for your habits become your character

Be careful of your character, for your character becomes your destiny.