பிரதாப முதலியார் சரிதம்

வணக்கம்.
தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் பிரதாப முதலியார் சரிதம் என்று அறியப்படுகிறது. இதை எழுதியவர் மயூரம் வேதநாயகம் பிள்ளை. அந்தக் கால மொழி நடையில் எழுதப்பட்ட இந்த நாவலைக் குழந்தைகள் வாசிக்கும் விதத்தில் எளிய தமிழில் வழங்க இருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
-oOo-
பிரதாபன் கதை.
சத்தியபுரி என்ற ஊரில் வசித்த ஏகாம்பரம் எனும் பெயருள்ள பிரதாபனின் பாட்டனாருக்குப் பள்ளிக் கூடத்தில் கல்விக் கட்டணம் செலுத்திக் கற்க வசதி இல்லாமல் இருந்தது. அதனால் அவர் சில ஆசிரியர்களிடம் அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து அததுடன் கல்வியையும் கற்றுக்கொண்டார்.
இப்படியே கற்று நல்ல அறிவு பெற்ற இளைஞனாக வளர்ந்த பின் ஒரு நாள் சாலையில் ஒரு இஸ்லாமியப் பக்கிரி குதிரையில் போகும்போது குதிரையிலிருந்து விழுந்து விட்டதைப் பார்த்தார். மயங்கி விழுந்த அவனுக்கு யாருமே உதவி செய்யாமல் போனார்கள். அவர் மட்டும் அவனைத் தூக்கி, காயங்களுக்கு கட்டுப் போட்டு முதலுதவி செய்தார்.
மயக்கம் தெளிந்து எழுந்த பக்கிரி, "நான் உங்கள் உதவிக்கு என்ன பிரதிபலன் செய்ய முடியும்?" என்று நன்றியுடன் வணங்கினான்.
அவரோ, "பிரதி பலன் எதிர்பார்த்து நான் இதைச் செய்யவில்லை. ஆபத்தில் உதவுவது புண்ணிய காரியம். அந்தப் புண்ணிய பலன் எனக்கு சொர்க்கத்தைத் தரும்" என்றார்.
"இறந்த பிறகு கிடைக்கும் சொர்க்கம் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் உங்களுக்குக் கடவுள் அருள் தருவார்" என்று அந்தப் பக்கிரி சொன்னான்.
"நான் நிரந்தரமான சுவர்க்க பலனைத்தான் விரும்புகிறேனே தவிர, வாழ்வில் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை" என்றார்.
அவர் இப்படியே தொடர்ந்து சொல்ல, பக்கிரிக்கு கோபம் வந்தது. அவன் அவர் கன்னத்தில் அறைந்து, "நான் சொல்வதை எதிர்த்துப் பேசுகிறாயா?" என்று கேட்டு விட்டுக் குதிரைலில் ஏறிப் போய்விட்டான்.
அப்போது அங்கிருந்த மற்றவர்கள், "இந்த அயோக்கியனுக்கு நாங்கள் எல்லாம் உதவி செய்யாமல் இருந்த போது நீ மட்டும் பெரிதாக உதவி செய்யப் போனாயே? அதற்குப் பலன் கிடைத்து விட்டது" என்று கேலி செய்து பேசினார்கள். அவரும் அவமானத்துடன் தலைகுனிந்தார்.
சில நாட்கள் கழித்து நாட்டை ஆண்டு கொண்டிருந்த நவாபின் சேவகர்கள் வந்து அவரைக் கைது செய்து கொண்டு போனார்கள். அவரோ, "நான் எந்தத் தவறும் செய்யவில்லையே" என்று அழுது கொண்டே போனார்.
நவாபின் சபைக்குள் வந்தவுடன் நவாப் எழுந்து வந்து அவரைக் கட்டிப் பிடித்து, "நான் பக்கிரியாக மாறுவேடத்தில் நாடு சுற்றி வரும்போது ஏற்பட்ட விபத்தில் என் உயிரைக் காப்பாற்றிய உமக்கு, உமது அறிவுத் தகுதிகளுக்காகவும் என் சபையில் திவான் பதவி தருகிறேன். உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்.
"வாழ்க்கையில் கிடைக்கும் பிரதிபலன் வேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு முறை பட்ட அடி நினைவிருக்கிறது. அதை நான் மறந்தாலும் என் கன்னம் மறக்காது" என்றார் ஏகாம்பரம்.
நவாப் சிரித்துக் கொண்டே, "கூப்பிட்டால் வராமல் இருந்து விடுவீர்கள் என்றுதான் காவலர்களைக் கொண்டு அப்படிக் கொண்டுவர சொன்னேன்" என்றார்.
ஏகாம்பரம் திவானாகி, சிறப்பாகப் பணி புரிந்தார். நவாபுகள் அவருக்குப் பொன்னும், செல்வமும், கிராமங்களும் ஏராளமாகப் பரிசளித்தார்கள். வயதான காலத்தில் அவர் தனது செல்வங்களுடன் திரும்பி சத்தியபுரியில் சந்தோஷமாக வாழ்ந்து பின்னர் இறந்தார். அவரது காலத்துக்குப் பின் அவரது சொத்துக்கள் எல்லாம் அவரது மகனான கனகாசலத்துக்குக் கிடைத்தன.
அவருக்கும் அவரது மனைவி சுந்தரத்தண்ணிக்கும் பிறந்த மகன் தான் இந்த கதையின் நாயகன் பிரதாபன்.
அவர்களுக்குப் பிரதாபன் ஒரே மகனாக இருந்ததால் மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். பிரதாபன் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவனது குறும்புத் தனங்களை எல்லாம் அவனது தந்தையார் கண்டிப்பதில்லை. ஆனால் அவனது எதிர்காலம் கருதி அவனது தாயார் கொஞ்சம் கண்டிப்புக் காட்டிக் கட்டுப்படுத்தி வந்தார்.
பிரதாபனுக்கு ஐந்து வயதானதும் அவனுக்குக் கல்வி கற்பிக்க அவனது தாயார் விரும்பினார். ஆனால் அவனது தந்தையாரோ அவன் இன்னும் குழந்தை என்று கூறிவிட்டார். அதனால் பிரதாபன் எட்டு வயது வரை எழுத்தறிவு இல்லாமல் வளர்ந்தான்.
அவனது தாயாரின் வற்புறுத்தல் காரணமாக அவன் தந்தை அவனை அழைத்து, "உன் அம்மா உன்னைப் படிக்க வைக்க வேண்டும் என்கிறாள். உன் விருப்பம் என்ன?" என்று கேட்டார்.
"நான் எதற்காகப் படிக்க வேண்டும்? எனக்கு இருக்கிற சுய அறிவு போதாதா? வேலைக்குப் போக வேண்டியவர்களுக்குப் படிப்பறிவு அவசியம். எனக்கு எதற்கு? ஏதாவது வாசிக்க வேண்டியிருந்தால் வாசிக்கவும், எழுத வேண்டியதை எழுதவும், கணக்கு எழுதவும் செயலாளர்களும், கணக்கர்களும் நம்மிடம் வேலை செய்கிறார்களே? நான் படிக்க அவசியமில்லையே" என்று பிரதாபன் பதில் சொன்னான்.
அவன் பாட்டியார் அடிக்கடி இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டதால் அவன் அப்படி சொன்னான். அவன் சொந்தமாக சிந்தித்து அப்படி எல்லாம் பேசியதாக எண்ணி அவன் தந்தையார் சந்தோஷப்பட்டார். வீட்டில் உள்ள எல்லோரும் அதை அறிந்து அவனைப் பாராட்ட ஆரம்பித்தார்கள். வேலைக்காரர்கள், கணக்கர்கள், செயலாளர்கள் எல்லோரும் வந்து அவனைப் புகழ்ந்தார்கள்.
பிரதாபனின் பாட்டியார் தான் சொன்னதுதான் அது என்பதை மறந்துவிட்டு, பிரதாபனின் சாமர்த்தியத்தை மெச்சி, அவனைத் தூக்கிக் கட்டிப் பிடித்து வாயாலும் பல்லாலும் முத்தங்கள் கொடுத்து அவனை மூச்சுத் திணற வைத்தார். அங்கே செல்லப்பிராணியாக இருந்த ஒரு குரங்கு பிரதாபனைப் பாட்டியார் தொந்தரவு செய்வதாக எண்ணிப் பாட்டியார் மேல் விழுந்து கடிக்க ஆரம்பித்தது. அதனால் பிரதாபனைப் பாட்டியார் விட்டு விட்டதால் பிரதாபன் அந்த மூச்சுத் திணறலில் இருந்தும் பற்கடியில் இருந்தும் தப்பித்தான்.
பிறகு பிரதாபனின் தாயார் இதைக் கேட்ட போது மிகவும் வேதனைப் பட்டார், "கல்வி பற்றி நீ நினைப்பது தவறு. கல்வி அறிவற்றவர்கள் மிருகங்களுக்கு சமம். அறிவியலையும், ஆன்மீகத்தையும் உணரக் கல்வி அவசியம். ஒளி இல்லாவிட்டால் கண்ணிருந்தும் ஒன்றையும் பார்க்க முடியாது. ஆழ உழுது பயிரிட்டால் தான் பலன் கிடைக்கும். உலோகத் தாதுக்களை உருக்கிப் புடம் போட்டால் தான் பயன் உண்டு. பட்டை தீட்டினால் தான் வைரம் ஒளி தரும். வெட்டித் திருந்தாத மண்ணில் புல்லும் பூண்டும் வளர்வது போல, கல்வி கற்காத மனதில் தீய பழக்கங்கள் வளரும். வேலைக்காரர்களை விட அதிகம் படிக்காவிட்டால் அவர்கள் செய்யும் தவறை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?" என்றெல்லாம் சொல்லிப் புரிய வைத்த பின் பிரதாபனின் தந்தையும் அவனுக்குக் கல்வி கற்பிக்கத் தீர்மானித்தார்.
ஆனால் அவனைப் பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்துப் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்தார். தாயாருக்கு கிராம காரியங்கள் பலவற்றை நிர்வகிக்க வேண்டி இருந்ததால் அவரால் பிரதாபனின் கல்வியை கவனிக்க முடியவில்லை.
அவனுக்கு செல்லம் கொடுத்தே பழக்கமான அவன் தந்தை, அவனுக்கு விருப்பமான நேரம் படித்தால் போதும் என்றும், அவன் படிக்காவிட்டால் தண்டனை கொடுக்கக் கூடாது என்றும் ஆசிரியரிடம் சொல்லி விட்டார். அதே சமயம் தினமும் பிரதாபனின் கல்வி அறிவும் வளர வேண்டும் என்ற நிபந்தனையால் பல ஆசிரியர்கள் நீக்கப் பட்டார்கள். இப்படி மாறி மாறி வந்ததால் பிரதாபன் தமிழின் பனிரெண்டு உயிரெழுத்தையும் கற்றுக் கொள்வதற்குள் பனிரெண்டு ஆசிரியர்கள் மாறிவிட்டார்கள்.
கடைசியாக வந்த ஆசிரியர் தன் மகனுடன் பிரதாபனின் வீட்டிலேயே தங்கி இருந்து பிரதாபனுக்கும் அவரது மகன் கனகசபைக்கும் சேர்த்து பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்.
இதனால் பிரதாபனின் பாட்டியார் ஒருநாள் ஆசிரியரைப் பார்த்து, "படித்துப் படித்து என் பேரனின் தொண்டை வறண்டு போவதால் இனி உமது மகன் படிக்கட்டும். என் பேரன் அதைக் கேட்டுக் கற்றுக் கொள்ளட்டும். அவனுக்குப் பாடம் தெரியாவிட்டால் அவனைப் பயமுறுத்த உமது மகனை அடிக்க வேண்டும்" என்று சொன்னார்.
அந்த ஏழை ஆசிரியர் வயிற்றுக் கொடுமையால் இந்த அநியாயமான நிபந்தனைக்குக் கட்டுப் பட்டார். பிரதாபனுக்குப் பாடம் தெரியாதபோதெல்லாம் கனகசபைக்கு அடிவிழும். பிரதாபன் சரியாகப் படித்த நாளும் இல்லை. கனகசபை அடிபடாத நாளும் இல்லை. அவன் தாங்க முடியாமல் ஒரு முறை "இந்த அடியெல்லாம் வயிற்றுப் பாட்டுக்காகத் தானே? அதனால் இனி வயிற்றிலேயே அடியுங்கள்" என்று அழுதான்.
பிரதாபன் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்துக்களைக் கற்றுக் கொள்வதற்குள் கனகசபையின் உயிரும் மெய்(உடல்)யும் மரணவேதனைப் பட்டன.
வெற்றிவளவன்
தொடரும்...


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home